ஒரு பில்லியன் டொலர்களை ஆப்பிள் நிறுவனத்திடம் நஷ்டஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்த இளைஞர் |உஸ்மான் பா|Live CID
அமெரிக்காவில் ஐபோன் திருட்டு சம்பவத்தில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், ஆப்பிள் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த உஸ்மான் பா(18) என்ற இளைஞர், நியூயார்க், மன்ஹட்டன் ஆகிய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன்களை திருடியதாக கைது செய்யப்பட்டார்.
ஆப்பிள் ஸ்டோரில் இருந்த முக அமைப்பைக் கண்டறியும் தொழில்நுட்பம், உஸ்மான் பா தான் திருடன் என்று அடையாளம் காட்டியதால் அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் பாஸ்டன் நகரில் இருந்த ஸ்டோரிலிருந்து 1,200 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள பொருட்களை அவர் திருடியதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், தான் அன்றைய தினம் மன்ஹட்டன் நகரில் தான் இருந்ததாக தற்போது உஸ்மான் பா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘புகைப்படம் இல்லாத உரிமம் ஒன்று தொலைந்து போனதாகவும், அது உண்மையான திருடனின் கையில் கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதால் இந்தத் திருட்டு சம்பவத்தில் எனது பெயர் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கைது சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டிய உஸ்மான் பா, தற்போது ஒரு பில்லியன் டொலர்களை ஆப்பிள் நிறுவனத்திடம் நஷ்டஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பதிலளித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், தங்களது ஸ்டோர்களில் Facial Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.