செல்போன் எண்ணை பிளாக் செய்த கல்லூரி மாணவியை கொலை செய்த இளைஞர்|பரபரப்பு வாக்குமூலம்|livecid.com
விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி இன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் தனியாக இருந்த திலகாவை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திலகா தட்டுத்தடுமாறி தனது உறவினருக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்த போது திலகவதி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது திலகவதியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பேரளையூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ் (19) அழைப்பு வந்துள்ளதும், அவர்தான் கொலை செய்ததும் தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்த போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நானும் திலகவதியும் கருவேப்பிலங்குறிச்சியில் 10, 11, 12ம் வகுப்பு ஒன்றாக படித்து வந்தோம். தற்போது நான் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கிறேன். அவர் கல்லூரிக்கு சென்றதில் இருந்து முன்புபோல என்னிடம் பேசுவதில்லை. கடந்த சில நாட்களாக என்னுடைய செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார்.
இது பற்றி திலகவதியிடம் கேட்க வீட்டுக்கு சென்றேன். அப்போது, 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, என்னை கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனால், நான் ஏற்கனவே தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்திவிட்டு தப்பினேன். வெளியூர் செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தபோது, என்னை போலீசார் கைது செய்து விட்டனர். இதையடுத்து, அவரை விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.