கற்பழிக்க முயன்றபோது சத்தம்போட்டதால் கொன்றோம் ஆட்டோ டிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்|Live CID
கற்பழிக்க முயன்றபோது சத்தம்போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” என்று தேனி உழவர்சந்தை அருகில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதான 2 ஆட்டோ டிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்த அய்யப்பன் மனைவி சாந்தி. தனியாக வசித்து வந்த இவர், தேனி உழவர் சந்தை பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர்களுக்கு உதவியாக வேலை பார்த்து, அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார். இவர் எப்போதுமே வீட்டுக்கு செல்லாமல் உழவர் சந்தை பகுதியிலேயே தூங்குவது வழக்கம்.
இந்தநிலையில், கடந்த 22-ந்தேதி அதிகாலையில் இவர் உழவர் சந்தை அருகில், சாலையோரம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்துப் பகுதி கயிறால் இறுக்கப்பட்டு இருந்தது. வாய் மற்றும் முகத்தில் சுவரொட்டி ஒட்டும் பசை தடவப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முகத்தில் பசை தடவப்பட்டு இருந்ததாலும், அப்பகுதியில் விஜய் ரசிகர்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததாலும், சுவரொட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. அதேநேரத்தில், அவர்கள் அப்பகுதியில் 21-ந்தேதி இரவு சுவரொட்டி ஒட்டியதாகவும், உழவர் சந்தை சுவரில் ஒட்டியபின்பு சுவரொட்டி காலியாகி விட்டதால் பசை டப்பாவை அங்கேயே போட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் கொலையாளிகளை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும் உழவர் சந்தைக்கு செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பதிவாகி இருந்த ஒரு ஆட்டோவை வைத்து போலீசார் துப்பு துலக்கினர்.
இதில் அந்த ஆட்டோ தேனி அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போ லீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தனது நண்பரும், ஆட்டோ டிரைவருமான அதே பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து சாந்தியை கொலை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டனையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை வழக்கில் மோகன்ராஜ், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியதில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாங்க கடந்த 21-ந்தேதி இரவில் மது சரக்கு அடிப்பதாக ஆட்டோவில் உழவர் சந்தை அருகில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாய் கரை பகுதிக்கு சென்றோம். நாங்க சரக்கு அடித்துவிட்டு வந்தபோது, அங்கு சாந்தி படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது கற்பழிக்க முயன்றோம். அனால் அந்த சமயத்தில் சத்தம் போட்டார். இதனால் நாங்க மாட்டிக் கொள்வோமோ? என பயந்து கயிறால் கழுத்தை இறுக்கினோம். இதில் அவர் இறந்து விட்டார். அவர் மேல் எங்கள் கைரேகை பதிந்து இருக்குமோ என்று பயந்து, அங்கு கிடந்த ஒரு டப்பாவில் இருந்த பசையை எடுத்து முகத்தில் தடவிவிட்டு தப்பித்துவிட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.