ஆள் மாறட்டம் செய்து நீட் வழியாக மருத்துவம் படித்த அரசு மருத்துவரின் மகன் - அம்பளமான உண்மை -www.livecid.com - Live CID
இந்தியா முழுவதும் நீட் தேர்வு மூலம் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் கடந்த மாதம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்.
இதேபோல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வு மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு சேர்ந்தனர். அதில் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மாணவர் குறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு இ-மெயில் மூலம் புகார்கள் வந்தன.
அந்த புகார்களில் வேறு ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதியதாகவும், அவருக்கு பதிலாக சென்னையை சேர்ந்த மாணவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதனை பார்த்த கல்லூரி முதல்வர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பேராசிரியர்கள் குழுவை கொண்டு ரகசிய விசாரணை நடைபெற்றது. முதற்கட்டமாக நீட் தேர்வின் போது மாணவரின் ஹால் டிக்கெட்டில் உள்ள நபரும், கல்லூரியில் படிக்கும் மாணவரும் ஒரே நபர் தானா? என்பதை அறியும் முயற்சியில் பேராசிரியர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.
அப்போது நீட் தேர்வு எழுதியவரின் ஹால் டிக்கெட்டில் இருந்த புகைப்படத்திற்கும், கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவரின் முகத்திற்கும் முரண்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரியில் பயிலும் சென்னை மாணவரிடம் இதுகுறித்து பேராசிரியர்கள் குழுவினர் விசாரித்தனர்.
அதன் பின்னர் சென்னை மாணவரின் பெற்றோரை தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு வரவழைத்தனர். அவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் அந்த மாணவர் கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் போலீசல் புகார் அளித்தார். அதில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் குறித்து, அசோக்கிருஷ்ணன் என்பவர் எனக்கு கடந்த 11 மற்றும் 13-ந் தேதிகளில் இ-மெயில் மூலம் புகார் அனுப்பி இருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரியின் துணை முதல்வர், பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் நீட் தேர்வு எழுதியவரும், தற்போது மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் சென்னை மாணவரும் ஒருவர் தானா? என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் உதித் சூர்யா என்ற அந்த மாணவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் அவரது தந்தை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.