விருதுநகரில் பட்டப்பகலில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஜெய ஆர்த்தி(5), ஜெய பூர்த்தி (5) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளன. அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். 2016-ல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. தற்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக அனந்தராமன் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளும் இயக்கி வந்தார். இதனால், தொழில் பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன. மேலும், தற்போது துணை தலைவராக இருக்கும் அனந்தராமன், ஊராட்சி செலவினத்திற்கான காசோலையில் கையெழுத்திடாமல் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால், ஊராட்சி தலைவர், துணை தலைவர் இடையே கருத்து மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில், தன்னிடம் பணியாற்றும் குருசாமி என்பவரது திருமணம் , தடங்கம் எனும் கிரமத்தில் இன்று காலை 20 - Aug - 2021 நடைபெற்றது. திருமணத்துக்கு வந்த அனந்தராமன் மணமக்களை வாழ்த்திவிட்டு, தனது காரில் ஏறுவதற்காக சாலைக்கு வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த தலைப்பாகை கட்டிய மர்ம நபர்கள் 4 பேர், அனந்தராமனை அரிவாளால் சரிமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அனந்தராமன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அனந்தராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். பட்டப்பகலில் ஊராட்சி மன்ற துணை தலைவரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.