மத்திய பிரதேச மாநிலம், புந்தேல்கண்ட் பிராந்தியத்திலுள்ள தாமோ மாவட்ட தலைமையகத்தில் இருந்து, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜபேரா எனும் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில், பனியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், நீண்ட காலமாக மழை பெய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், மழைக் கடவுளை திருப்திப்படுத்த சிறுமிகளை நிர்வாணமாக நிற்க வைத்து பூஜை செய்ய திட்டமிட்டனர்.
இதன் படி மழைக் கடவுளை மகிழ்விப்பதற்காகவும், வறட்சி நீங்கி மழை நன்கு பெய்யும் வேண்டும் என்பதற்காகவும் அக்கிராம மக்கள், 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்க வைத்து சடங்கு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பனியா கிராமத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் மழை கடவுளை மகிழ்விப்பதற்காக இளம் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலமாக மழை வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இது போன்ற மூட நம்பிக்கைகள் பயனற்றது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே முடியும் எனவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமோ மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.www.livecid.in