திருச்சி மணப்பாறை அருகே திமுக பிரமுகர் வட்டாட்சியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திமுக பிரமுகரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபா சகாயராஜ் என்பவர் நிலவரி தனிவட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். நில விவகாரம் தொடர்பாக வட்டாட்சியரை திமுக நகர பொருளாளர் கோபி அணுகியுள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் வட்டாட்சியர் பார்த்திபா சகாயராஜை கோபி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினர். தகாத வார்த்தையால் பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கைகளால் தாக்குதலில் ஈடுபட்டது என 3 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க பிரமுகர் கோபி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் திருச்சி யில் சற்று பரபரப்பு உண்டானது.