சேலத்தில் மனைவி, மாமியார் மீது ஆசிட் வீசிய சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்தார். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (52). இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் தகராறின்போது மனைவியை ஏசுதாஸ் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் ரேவதி பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.
இந்நிலையில், ரேவதியும் அவரது தாய் ஆராயியும் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுக்க வந்தனர். புகார் கொடுத்துவிட்டு, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த ரேவதியின் கணவர் ஏசுதாஸ் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ரேவதி முகத்தில் வீசி விட்டுத் தப்பி ஓடி விட்டார். இதில், ரேவதியின் முகம், மார்பு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் வலியால் துடித்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயமடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேவதிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், ரேவதியின் தாய்க்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை தேடி வந்தனர்.
இதனிடையே, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால், இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து காவல் துறையினர் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.