பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த அண்ணன் தம்பி இருவர் கைது
சென்னை சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி(32) என்பவர் கடந்த 3ம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று உள்ளார். ஊருக்குச் சென்ற அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த LED டிவி, ஓம் தியேட்டர், செல்போன், தங்க செயின், கம்மல், வெள்ளி அரணாக்கொடி உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனதாக கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் ரவி உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் உதவி ஆணையாளர் ரவி தலைமையில் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் ஜமீஸ் பாபு, பெருமாள், சயத் அப்சர், தலைமை காவலர்கள் யாசர் ஹராபத், சுப்பிரமணி, முதல்நிலை காவலர்கள் நித்தியானந்தம், பவித்ரன், சரிதா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய பின்னர் ஓஎம்ஆர் சாலையில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது வடமாநிலத்தை சேர்ந்த இருவர் பையில் பொருட்களை எடுத்து சென்றதை போலீசார் கவனித்துள்ளனர்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்த போலீசார் கேளம்பாக்கத்தில் பதுங்கியிருந்த இருவரை கைது செய்தனர்.
இருவரையும் செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டபோது 32 வயதான பவன்சிங் என்பதும், 30 வயதான ஜெகதீஷ் சிங் என்பதும் இவர்கள் இருவரும் நேபாலை சேர்ந்த உடன்பிறந்த அண்ணன் தம்பிகள் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நேப்பாலை சேர்ந்த இருவரும் கேளம்பாக்கத்தில் தங்கி வந்ததும் தம்பி ஜெகதீஷ் சிங் சிமெண்ட் மூட்டை லோடு ஏற்றும் வேலை செய்து வந்ததும் மற்ற நேரங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பட்டப்பகலில் அண்ணன் தம்பி இருவரும் சாலையில் நடந்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூட்டியிருக்கும் வீட்டை குறிவைத்து கொள்ளையடிது வந்துள்ளனர்.
கையில் எடுத்துச்செல்லும் கௌபாரை கொண்டு வீட்டின் பூட்டுகளை உடைத்து வீட்டினுள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சுருட்டிக்கொண்டு அதேவீட்டில் பையை எடுத்து அதில் திருடிய பொருட்களை வைத்துக்கொண்டு சாதாரணமாக திருடிய பொருட்களுடன் சாலையில் நடந்தே வீட்டுக்கு சென்றுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களை குறைந்த விலைக்கு கேட்பவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், இதேபோல் செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லை பகுதியில் மட்டும் 3 இடங்களில் அண்ணன்-தம்பி கைவரிசையை காட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சகோதரர்கள் இருவர் ஒன்றாக திருடும் சம்பவத்தை கேட்ட போலீசார் சற்று வியந்துபோனர். இச்சம்பவம் குறித்து இருவர் மீது வழக்கு கைது செய்த போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு LED டிவி, 5 ஸ்பீகர்கள் கொண்ட ஹோம் தியேட்டர், இரண்டு செல்போன்கள், இரண்டு காம்மள், வெள்ளி அரணாக்கொடி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
புகார் கொடுத்த ஒரே நாளில் வீட்டில் திருடி நபர்களை கண்டுபிடித்து திருடுபோன பொருட்களையும் மீட்டுக் கொடுத்த துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் ரவி தலைமையிலான செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் ஜமீஷ் பாபு, பெருமாள், சையத் அப்சர், தலைமை காவலர்கள் யாசர் ஹராபத், சுப்பிரமணி, முதல் நிலை காவலர்கள் நித்தியானந்தம், பவித்ரன், சரிதா ஆகியோரை அடையார் துணை ஆணையர் (பெறுப்பு) மகேந்திரன் வெகுவாக பாராட்டினார்.
Reporter : Ezhumalai