கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவியை கிரிக்கேட் மட்டையால் அடித்தும், தனது இரு குழந்தைகளை தலையணை அழுத்தியும் கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் பிரியா என்ற மனைவியும், தரன், தாகன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மணிகண்டனுக்கு தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் சுமார் 15 லட்ச ரூபாய் அளவிற்கு கடன் பெற்றதுடன், அதைத் திருப்பி அடைக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மணிகண்டன் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக பணிக்கு செல்லாமல் கடன் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நணர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இதுக்குறித்து நேற்று கணவன் மனைவி இருவருக்கும் சண்டை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மணிகண்டன், கோபத்தில் கிரிக்கெட் மட்டையால் மனைவி பிரியாவை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இரு மகன்களையும் தலையணையால் அழுத்தி கொலை செய்த மணிகண்டன், தானும் சமையலறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இன்று காலையில் இருந்தே வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமல் இருந்தால் அருகிலிருந்த, அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து அவர்களின் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
நீண்ட நேரம் கதவு தட்டப்பட்டும், திறக்காத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்தபோது, வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பெரும் உயிரிழந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட 4 சடலங்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்சனையால் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் பிரச்சனையால் தனியார் வங்கி ஊழியர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.