மேலூர்-சிவகங்கை சாலையில் நள்ளிரவில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் நாகநாதன் தலைமையிலான போலீசார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது சிவகங்கையில் இருந்து நத்தத்திற்கு காரில் வந்த அழகு, பழனிசாமி, குமார் உள்ளிட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் உடனடியாக மேலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது திமிங்கலத்தின் எச்சத்தினை கள்ளத்தனமாக விற்பனை செய்ய வந்ததாக தகவல் தெரிவித்ததையடுத்து அவர்களிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கிலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அம்பர்கிரிஸ் என்றால் என்ன ? :
திமிங்கலத்தின் எச்சம் அல்லது வாந்திக்கு அம்பர்கிரிஸ் என பெயர். கடலில் உள்ள பீலிக் கணவாய் போன்ற கடினமான ஓடுகளை கொண்ட மீன்களை திமிங்கலங்கள் வேட்டையாடி உண்ணும். அப்போது இந்த ஓடுகள் திமிங்கலங்களுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இதனால் திமிங்கலத்தின் வயிற்றில் இந்த ஓட்டை சுற்றி ஒருவிதமான திரவம் உற்பத்தி ஆகிறது. இதுவே அம்பர்கிரிஸ் ஆகும்.
இந்த அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கடலின் மேற்பரப்பில் மிதந்து வரும் அம்பர்கிரிஸ் மீது சூரிய ஒளி பட்டு இதனை கடினமான பொருளாக மாற்றுகிறது.