மது அருந்துவதில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. தமிழக காவல் துறைக்கு சட்டம் ஒழுங்கு என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான கொலைகளுக்கு மதுவே அடிப்படையாக உள்ளது. ஆனாலும் மறுபுறம் மதுக்கடைகள் சுதந்திரமாக இயங்கி வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் சென்னை பல்லாவரத்தில் குறைவாக மது ஊற்றிய அண்ணனை தம்பி கத்தியால் சரமரியாக வெட்டிச் சாய்த்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைத்தியர் தெரு விரிவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (29). இவருக்கு ரெட்லைட் என்கிற சத்யா வயது (27) என்ற தம்பி உள்ளார். இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அண்ணன் முருகேசன் தம்பிக்கு குறைவாக மது ஊற்றியதாக தெரிகிறது,
தனக்கு குறைவாக மது கொடுத்ததால் ஆத்திரமடைந்த தம்பி அண்ணனுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது, அதில் ஒருவரை மாற்றி ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பி வீட்டில் காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு வந்து அண்ணன் முருகேசனை சரமாரியாக வெட்டினார்.
இதில் அண்ணன் முருகேசன் ரத்தவெள்ளத்தில் மயங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் முருகேசனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் முருகேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு முருகேசனை அங்கிருந்த மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை கத்தியால் வெட்டிய தம்பி ரெட்லைட் சத்யாவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுக்காக அண்ணனை தம்பி கத்தியால் வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது என்னும் மயக்கத்தில் மாசுபடும் தமிழ் நாடு .....
மாநிலம் மது நிலமாக மாறுகிறது மாற்றம் மசுபடுகிறது.......