ரெயிலின் முன் பாய்ந்த 18 வயது இளைஞரை காப்பாற்றும் ரயில்வே காவல் துறை அதிகாரியின் துணிச்சல் மிக்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள வித்தல்வாடி ரெயில்வே நிலையத்தில் இந்த சம்பவம் நேற்று (மார்ச் 23) அரங்கேறியது.
சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் இருந்த 18 வயது இளைஞர் வேகமாக வந்து கொண்டிருந்த ரெயிலின் முன் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கிருந்த ரயில்வே காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டேபில் ரிஷிகேஷ் கவனித்தார். பின், உடனடியாக தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்த அவர் 18 வயது இளைஞரை துணிச்சலாக மீட்டார். இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
வீடியோவின் படி, தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ரெயில்வே பிளாட்பார்மின் ஓரத்தில் நின்று கொண்டு ரெயில் வருகிறதா என்பதை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். ரெயில்வே காவல் துறையை சேர்ந்த கான்ஸ்டேபில் ரிஷிகேஷ் மேன் அதே பிளாட்பார்மில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பணியின் போது, இளைஞர் பிளாட்பார்மின் ஓரத்தில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கிறார்.
பின் அங்கிருந்து தள்ளி நிற்குமாறு ரிஷிகேஷ், இளைஞரிடம் செய்கையில் வலியுறுத்துகிறார். பின் சில நொடிகளில் ரெயில் வருவதை உறுதிப் படுத்திக் கொண்ட இளைஞர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். இளைஞர் குதிப்பதை பார்த்த ரிஷிகேஷ், துணிச்சலாக தண்டவாளத்தில் இறங்கி, இளைஞரை தண்டவாளத்தில் இருந்து வெளியே இழுத்து தள்ளினார். பின் அதே தண்டவாளத்தில் மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றது.
இந்த பரபர சம்பவம் அடங்கிய வீடியோவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதே வீடியோவை ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவானிஷ் ஷரனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இணையத்தில் வெளியானது முதல் இந்த வீடியோ அதிவேகமாக பரவி, சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக வியூக்களை பெற்று இருக்கிறது.
ரெயிலின் முன் பாய்ந்து இளைஞரை துணிச்சலாக மீட்ட காவல் துறையை சேர்ந்த ரிஷிகேஷுக்கு நெட்டிசன்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்