ஜாதகத்தை நம்பி பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் - மூட நம்பிக்கையை வளர்க்கும் இந்து மதம் - தூங்கும் மத குருக்கள் - தூளியாட்டும் அரசியல் . Livecid - livecidtamil
.திண்டுக்கல் மாவட்டம், ராசாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ்வரன், லதா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு இரண்டாவதாக மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி பார்த்தபோது இரண்டாவது குழந்தை ராகுலைக் காணவில்லை என தாய் லதா கதறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை அக்கம் பக்கம் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பாலாற்று அருகே உள்ள புதர்ச்செடியில் குழந்தை ராகுல் சடலமாக இருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்றுபார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது தெரியவந்ததுள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்து முதலே தாய் லதா மன கஷ்டத்துடன் இருந்துவந்துள்ளார்.
மேலும் குழந்தையின் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்ததாக லதா போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தையை ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.