திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகேஸ்வரி என்ற பெண் தூள் படத்தில் வரும் சொர்ணா அக்கா போல சண்டியர்தனம் செய்து கொண்டு அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தவர். சிறு சிறு பாக்கெட்டுகளில் ஸ்பிரிட் எனப்படும் எரிச்சாராயத்தை நிரப்பி கூலித்தொழிலாளிகளை குறி வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனால், பாக்கெட் சாராயத்தால் அப்பகுதியில் திருட்டு, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பீதியிலேயே இருந்து வந்தனர்.
8 முறை குண்டர் சட்டம்
கடந்த 27 ஆண்டுகளாக வாணியம்பாடியில் கள்ளச்சாராய தொழிலில் கொடிகட்டிய பறந்து வந்த மகேஸ்வரியின் மீது 8 முறை குண்டர் சட்டம், சுமார் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் எதற்கும் அசராமல் இடைவிடாமல் தொடர்ந்து கள்ளச்சாராயம் நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன் கோயில் திருவிழா கூட்டத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்களை தட்டிக் கேட்ட முயன்ற இளைஞர்கள் மீது மகேஸ்வரியின் ஆட்கள் தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்த்து பொதுமக்கள் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைத்து நேதாஜி நகர் பகுதியில் வீடு, வீடாகவும், பிற இடங்களில் பல்வேறு வகையில் இந்த சாராய கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மகேஸ்வரி திருவண்ணாமலையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விடிய விடிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரி அவரது கணவர் சீனிவாசன், தேவேந்திரன், உஷா, சின்னராஜ், மோகன் மற்றும் இவர்கள் தங்குவதற்கு வீடு கொடுத்த ஒரு பெண்மணி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தையே கலக்கி வந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி கைது செய்யப்பட்டிருப்பது போலீஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.