பள்ளி மாணவிக்கு திருமணம் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் - தேர்வு எழுதிய சிறுமி
சென்னை வடபழனியில் சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வந்த புகாரையடுத்து இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினர் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் முறையிட்டனர்.
இதனையடுத்து போலீஸ் துணையோடு வடபழனியில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்ற குழுவினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பிறப்பு சான்றிதழை சோதனை செய்ததில், திருமண பெண்ணிற்கான வயது இல்லையென்றும் குறைந்த வயது இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மணமகன் ராயப்பன், மற்றும் சிறுமியின் பெற்றோர் புருஷோத்தமன், பொன்மணியிடம் அறிவுரை வழங்கினர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 18 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினரிடம் மணப்பெண்ணாக இருந்த சிறுமி பள்ளிக்கு சென்று தேர்வெழுத வேண்டும் என தனது விருப்பதை கூறினார். இதனையடுத்து தனது அலங்கார உடையை மாற்றி பள்ளி சீருடையுடன் சென்று 10 ஆம் வகுப்பிற்கான தமிழ் பாட தேர்வை பள்ளி மாணவி எழுதினார். குக் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறும் என கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே குழந்தை திருமணம் நடைபெற இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.