11ம் வகுப்பு மாணவிகள் மூன்று பேர் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் அருகே 3 மாணவிகள் மயங்கிய நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். உடனே ஆம்புலன்ஸ் வந்தபோது மாணவிகளில் ஒருவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி பரிசோதனை செய்தபோது அவர்கள் மதுமயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 2 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவிகள் மூவரும் கரூர் மாநகர பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால், மறு தேர்வு எழுத பள்ளி சீருடையுடன் வேறொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வந்தது தெரிய வந்தது. ஒயின் குடித்தால் நல்ல சிவப்பான நிறம் கிடைக்கும் என்று யாரோ சொன்னதை நம்பி தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி மூவரும் குடித்துள்ளனர்.
ஒயினில் போதை இருக்கும் என்பது தெரியாமல் குடித்துவிட்ட அவர்கள் மூவரும் சர்ச் கார்னர் பகுதிக்கு வந்து மயங்கிய நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து, 3 மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை சொல்லி அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.