திருவாரூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் பன்னீர்செல்வம் (55). இவர் மது அருந்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பன்னீர்செல்வம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பன்னீர்செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதில் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் அண்ணன் மகன் கொலை செய்தது தெரியவந்தது.
பன்னீர்செல்வத்தை கொலை செய்த விஜய் கொலை செய்த ஆயுதத்துடன் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார். இந்த கொலை குறித்து வலங்கைமான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.