திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் வரதராஜன் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் மனைவி சுலோச்சனா (57).இவர் நேற்று தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தாம்பரத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்து திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் இறங்கியுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து கருணாநிதி தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நாங்கள் சிஐடி போலீஸ், இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடப்பதால் பாதுகாப்பாக இருக்க நகையை கழட்டி பையில் போடுமாறு மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு அந்த மூதாட்டி போலீஸ் னு சொல்றீங்க... ஆனால் சாதாரண உடையில் இருக்கீங்களே என கேட்டதற்கு, நாங்க சிஐடி போலீஸ். அப்படித்தான் இருப்போம் எனக் கூறி வலுக்கட்டாயமாக நகைகளை கழற்ற சொல்லியுள்ளனர். இதனால் செய்வதறியாது பயந்து போன மூதாட்டி நகையை கழட்டி பையில் போடும்போது அந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கையில் இருந்த 11 சவரன் நகையை பறித்திக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செய்வதறியாது தவித்தார். இதுகுறித்து மூதாட்டி சுலோச்சனா மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இருசக்கர வாகனத்தில் வந்து நூதன முறையில் மூதாட்டியிடமிருந்து 11 சவரன் நகையை கொள்ளையடித்தது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.