துணிவு படத்தை பார்த்து விட்டு துணிவோடு வங்கியில் கொள்ளை முயற்சி.. இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்
திண்டுக்கல்லில் துணிவு உள்ளிட்ட பல திரைப்படங்களை பார்த்து வங்கியில் பட்டப்பகலில் இளைஞர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வழக்கம் போல ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது, திடீரென வங்கியில் புகுந்த வாலிபர் ஒருவர் ஊழியர்களை கட்டி போட்டார். பின்னர், அவர்கள் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, ஊழியர் ஒருவர் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, வங்கிக்குள் ஓடி வந்த வாடிக்கையாளர்கள் சேர்ந்து அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில் ரகுமான்(25) என தெரியவந்தது. சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக இதை செய்தாக வாக்குமூலத்தில் கூறினார். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.