திருமுல்லைவாயலில் அரசு புறம்போக்கு நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை ஒப்பந்தம் செய்துரூ.2.20 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, அசோக் நகர், 6 வது அவென்யுவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 61). இவர் நிலம் வாங்க முடிவு செய்து, ஆவடி , திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த நிலத்தரகர்கள் அன்பரசன், குருசாமி ஆகியோரை அணுகியுள்ளார். பின்னர், இவர்கள் மூலம் பாலசுப்பிரமணியம் திருமுல்லைவாயல், மணிகண்டபுரம், 1 வது வலது சாலையைச் சேர்ந்த ராமதாஸ் (வயது 59) என்பவரது மனைவி உமா என்பவருக்கு சொந்தமான 10,530 சதுரடி நிலத்தை ரூ.3.50 கோடிக்கு விலை பேசி, முன்பணமாக ரூ.2.20 கோடி கொடுத்து 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிரைய ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இதன் பிறகு, ராமதாஸ், உமா தம்பதியினர் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கண்ட நிலத்தை பாலசுப்பிரமணியத்திற்கு பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து பாலசுப்பிரமணியம் மேற்படி நிலம் குறித்து விசாரித்த போது, அந்த நிலம் கணக்கன்குட்டை என்கிற அரசு நீர்நிலை புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்தது.
இது குறித்து பாலசுப்ரமணியன் ஆவடி காவல் ஆணையரகத்தில், ராமதாஸ், உமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆய்வாளர் மைனர்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ராமதாசும், அவரது மனைவி உமா ஆகியோர் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது.இதனால் போலீசார் கணவன், மனைவி இருவரையும் தேடினார்கள்.ஆனால் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.தீவிர தேடுதல் வேட்டையில் 13.03.2023 ராமதாஸை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.