சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்குட்பட்டவர்தான் என்றும், அவருடைய கைதும், நீதிமன்ற காவலும்சட்டப்பூர்வமானது என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கில் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அளித்துள்ள தீர்ப்பை உறுதி செய்துள்ளார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 4-ம் தேதி மாறுபட்ட தீர்ப்பளித்திருந்தனர். இதனால் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவுப்படி 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரிக்கப்பட்டது.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக கடந்த 11-ம் தேதி செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும், 12-ம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
Company logo
தொடர்ந்து இந்த வழக்கை நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி கார்த்திகேயன் விசாரிக்கத் தொடங்கினார்.செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் காணொலி மூலமாக ஆஜராகி பகல் 1.15 மணி வரை அமலாக்கத்துறையின் வாதத்துக்கு பதில் வாதம் புரிந்தார். அப்போது நீதிபதி ‘தொடர்ச்சியாக பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு வாதிடுகிறீர்களா?’ என வாஞ்சையுடன் கேட்டார்.
அப்போது கபில் சிபில் ‘எனக்கு உடல்நிலை சரியில்லை. நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சிறிது வலி உள்ளது’ என்றார். அதையடுத்து நீதிபதி, ‘கபில் சிபிலின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை சிறிது நேரம் தள்ளிவைக்கிறேன். இது ஒன்றும் பள்ளியோ, கல்லூரியோ அல்ல. எனவே நீங்கள் சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு வாதிடுங்கள்’ எனக்கூறி கபில் சிபிலுக்கு ஓய்வு கொடுத்தார்.
சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு வாதிட ஆரம்பித்த கபில் சிபில், ‘உங்கள் முன்பாக வாதிட எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஒரு வழக்கில் உங்கள் முன்பாக வாதிட ஆசைப்படுகிறேன்’ என்றார். அதற்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயனும், ‘உங்கள் வாதத்தைக் கேட்க எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
நீதிபதி கார்த்திகேயன் உணவு இடைவெளிக்கு கூட தனது இருக்கையை விட்டு எழுந்து செல்லவில்லை. தண்ணீரும் அருந்தவில்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தீர்ப்பை தனது சுருக்கெழுத்தாளர் எழுத, வாசிக்கத் தொடங்கிய நீதிபதி, இருதரப்பின் வாதங்களையும் ஒப்பிட்டு, மாலை 4.30 மணிக்கு முடித்தார். காலை முதல் மாலை வரை 6 மணி நேரம் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்ததால், தீர்ப்பை குறிப்பெடுத்த சுருக்கெழுத்தர்கள் இருவர் மட்டும் இடையே உணவு இடைவேளைக்காக மாறிக்கொண்டனர். வழக்கை விசாரித்து முடித்த மறுகணமே திறந்த நீதிமன்றத்திலேயே வைத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தனது தீர்ப்பில், ‘‘அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கான அதிகாரம் இல்லை என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவரை அமலாக்கத்துறை கைது செய்ததும், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததும் சட்டப்பூர்வமானது தான் என்பதால் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியின் தீர்ப்பை நானும் உறுதி செய்கிறேன்.
ஒருவரை கைது செய்தால் அந்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர வேண்டியது அமலாக்கத்துறையின் கடமை. அதைத்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். ஆனால் அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியும், ஒருநாள் கூட அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்யாதது ஏற்புடையதல்ல.
அதேபோல கைதுக்கான காரணத்தை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுவதையும் ஏற்க முடியாது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலாக கருதக்கூடாது. அவர் முழுமையாக குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
எனவே செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையல்ல. என்னுடைய இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு அனுப்புகிறேன். செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து காவலில் எடுத்து விசாரிப்பது என்பதை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வே முடிவு செய்யும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு மனு: இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாதம் அவகாசம் வழங்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
#livecidtamil #livecid #cni #ttf #treanding #tamilcid #microsoft #like #crime #cid