ராசிபுரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தி.மு.க. பெண் கவுன்சிலர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பொம்மி தெருவை சேர்ந்தவர் மோகன்லால். இவருடைய மூத்த மகன் அருண்லால் (வயது 52). இவர் ராசிபுரத்தில் உள்ள கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி தேவி பிரியா (42). இவர் ராசிபுரம் நகராட்சியின் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.
இந்த தம்பதியினருக்கு ரித்திகா (21), மோனிஷா (16) என்ற 2 மகள்கள் இருந்தனர். பி.காம். பட்டதாரியான மூத்த மகள் ரித்திகா பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அருண்லால், மனைவி மற்றும் இளைய மகள் மோனிஷா ஆகியோருடன் வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்து வந்தார். வீட்டின் கீழ் தளத்தில் முன்னாள் கவுன்சிலரும், அருண்லாலின் தாயாருமான சுசீலா வசித்து வருகிறார். மோனிஷா ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுசீலா வெளியே சென்று விட்டதாக தெரிகிறது. வீட்டின் மேல் தளத்தில் வசித்த அருண்லால், தேவி பிரியா ஆகியோர் மின்விசிறியில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுடன் இருந்த இளைய மகள் மோனிஷா படுக்கையில் பிணமாக கிடந்தார். கணவன், மனைவி இருவரும் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு மகள் இறந்ததை உறுதி செய்த பின்னர் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் அருண்லால் வீட்டை எட்டி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் சுசீலா இல்லை. இதனால் மேல் தளத்தில் உள்ள அருண்லால் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததையும், அவர்களது மகள் மோனிஷா படுக்கையில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உறவினர்கள் கதறல்
இதுகுறித்து அவர்களது தம்பி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தம்பி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அருண்லால், தேவிபிரியா, மோனிஷா ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது உருக்கமாக இருந்தது. இதற்கிடையில் தகவல் அறிந்து ஏராளமான தி.மு.க.வினர், உறவினர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் அவர்களது வீட்டின் முன்பு திரண்டனர்.
அந்த பகுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியது. அருண்லால் இறப்பதற்கு முன் அந்த பகுதியைச் சேர்ந்த நண்பர்கள், உறவினர்களிடம் நன்றாக பேசி கொண்டிருந்துள்ளார். அவர் அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாகவும் பழகி வருபவர் என்று அவரது நண்பர்கள், உறவினர்கள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
மேலும் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட தி.மு.க. பெண் கவுன்சிலர் தேவி பிரியா, அருண்லால், இளைய மகள் மோனிஷா ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே பெங்களூருவில் இருந்த அவர்களது மூத்த மகள் ரித்திகா விரைந்து வந்தார். தனது தந்தை, தாய், சகோதரியின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய செய்தது. இந்த சம்பவம் குறித்து அருண்லாலின் தம்பி நந்தலால் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையா?
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் தனது கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.