விழுப்புரம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 இளைஞர்களை காரில் விரட்டி சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தி உறவினர்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்டி ஹோமியோபதி படித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள கணவரை பார்த்துவிட்டு கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரிக்கு தனியார் ஆம்னி பேருந்தில் புறப்பட்டார். பேருந்து நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வந்தபோது, அங்கு நெல்லையை சேர்ந்த 12 இளைஞர்கள் அதில் ஏறியுள்ளனர். அதில் மதுபோதையில் இருந்த 2 இளைஞர்கள் மருத்துவ மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாணவி முறையிட்டும் டிரைவரும், கண்டக்டரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், விழுப்புரம் பகுதியில் உள்ள தனது உறவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ளார். உடனே அவரது உறவினர்கள் பேருந்து எங்கு வருகிறது என்று கேட்டபோது விழுப்புரத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேருந்தை காரில் விரட்டிச் சென்று விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் 2 இளைஞர்களுக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் விழுப்புரம் புறநகர் காவல் நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முகமதுயாசர்(20), தங்கமாரியப்பன்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
www.livecid.in Crime News Gallery Tamil Crime News Portal www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.