விஷம் தடவிய கேக்கை சாப்பிட்டு தாய்-தந்தை உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுடைய மகள் தியா காயத்ரி (25). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர்களின் சொந்த ஊர் கேரளா ஆகும்.
காயத்ரிக்கு கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் நடந்தது. அதன்பிறகு அவர்கள் பெங்களூருவில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் திருமணமான ஒரு மாதத்திலேயே அதாவது கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். மகள் கணவரை பிரிந்து வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் காயத்ரியுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 21-ந் தேதி கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கேக்கில் விஷத்தை தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்புகொண்டு மகளின் நிலை குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து கணேசனின் தம்பி அண்ணனின் செல்போனுக்கு பலமுறை அழைப்பு கொடுத்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு பிணமாக கிடந்த கணேசன், விமலா, காயத்ரி ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அவர்களின் தற்கொலைக்கு காரணம் மகள் தியா காயத்ரி திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவரை பிரிந்து வந்ததாலும், பெற்றோருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷம் தடவிய கேக்கை சாப்பிட்டனர்
திருமணமான ஒரு மாதத்திலேயே மகள் கணவரை பிரிந்து வந்து விட்டாரே என்று கணேசன், விமலா ஆகியோர் அடிக்கடி கூறி வேதனை அடைந்தனர். அவர்கள் தனது மகள் காயத்ரியுடன் சேர்ந்து தற்கொலை செய்வது என்று முடிவு செய்தனர். ஆனால் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று யோசித்தனர். அப்போது கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதையடுத்து கணேசன் பேக்கரிக்கு சென்று கேக் வாங்கி வந்து அதில் விஷத்தை தடவியும், எலுமிச்சை பழ சாற்றை பிழிந்தும் 3 பேரும் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.
உருக்கமான கடிதம் சிக்கியது
கணேசன், தாய் விமலா மற்றும் மகள் தியா காயத்ரி தற்கொலை செய்த சம்பவத்தில் தியா காயத்ரி தனது கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் "எங்களின் சாவுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்" என்று எழுதி இருந்ததாக போலீசார் கூறினர்.
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.