6 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக முருகன் (62) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் போக்சோ, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உள்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து முருகளை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சரத்ராஜ் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளில் முதல் சிறுமிக்கு ரூ.7 லட்சம், மற்றொரு சிறுமிக்கு ரூ.6 லட்சம், மற்ற நான்கு சிறுமிகளுக்கு தலா ரூ.4 லட்சம் என மொத்தமாக ரூ.29 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.