சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும் அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்பவரும் காதலித்த நிலையில் அதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பெண், சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சதீசை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து விசாரணையை முடித்த சிபிசிஐடி போலீசார் சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஏ.எம்.ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி வாதிட்டார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததையடுத்து, வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் சதீஷ் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ேநற்று நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்தார். தீர்ப்பில், இந்த வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு கொலை குற்றப்பிரிவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும். இந்த பிரிவு குற்றத்திற்காக அபராதம் ₹25 ஆயிரம் விதிக்கப்படுகிறது. பெண்களை கொடுமைப்படுத்திய பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ₹10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தீர்ப்பு உறுதி செய்யப்படுவதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஆவணங்களுடன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இறந்துபோன பெண்ணின் செல்போன் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குற்றவாளி சதீஷின் செல்போன் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
அபராத தொகை ₹35 ஆயிரம் இறந்துபோன பெண்ணின் சகோதரிகளிடம் வழங்கப்பட வேண்டும். சகோதரியை இழந்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இறந்துபோன பெண்ணின் சகோதரிகளுக்கு தமிழக அரசு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொகையை 30 நாட்களுக்குள் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கடைசி தூக்கு: 1995 ஏப்ரல் 27ல் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டார். இதுதான் தமிழ்நாட்டில் கடைசி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்கு. இந்திய அளவில் கொல்கத்தாவில் 14 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ெசய்யப்பட்ட வழக்கில் தனஞ்செயின் சட்டர்ஜி 2004ல் தூக்கிலடப்பட்டதுதான் கடைசி தூக்காகும்.கடந்த 1984ல் சென்னை விருகம்பாக்கத்தில் உறவினர்கள் 9 பேரை கொன்ற வழக்கில் ஜெயப்பிரகாஷ் என்பருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்டோ சங்கருக்கு அடுத்தபடியாக தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோருக்கு 2007ல் சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீட்டில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 2011 ஆகஸ்ட் 29ம் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியது.
சிறுமி மற்றும் அவரது சகோதரனை கொலை செய்த வழக்கில் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012 நவம்பர் 1ல் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2014ல் தென்காசி மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில் நெல்லை சிறப்பு நீதிமன்றம் பொன்னுசாமி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. 2021ல் சென்னையில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனை பின்னர் உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது. கண்ணகி-முருகேசன் ஆணவ கொலை வழக்கில் கடந்த 2022ல் கடலூர் சிறப்பு நீதிமன்றம் கண்ணகியின் அண்ணனுக்கு மரண தண்டனை விதித்தது.
இந்தியாவில் 561 பேர்
இந்தியா முழுவதும் தற்போது 561 பேர் தூக்கு தண்டனை பெற்று மேல்முறையீடு செய்து அதன் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 2023ல் மட்டும் 120 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021ல் 146 பேருக்கும், அதிகபட்சமாக 2022ல் 167 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11 பேர்
தமிழ்நாட்டில் தற்போது மரண தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் 11 பேர். இவர்களில் 6 பேர் தண்டனையை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மற்ற 5 பேரின் கருணை மனு ஜனாதிபதியிடம் உள்ளது.